Monday, July 9, 2018

அனைத்து  அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற நெட் என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களாக இந்த தேர்வை cbse நடத்தி வந்தது. ஆனால் இந்த வருடம் முதல் மத்திய அரசு உயர் கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பு டிசம்பர் மாத நெட் தேர்வுக்கான உத்தேச தேதியை அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு முதல் நெட் தேர்வு இணையம் மூலமாக நடத்தப்படுகிறது.
அது தொடர்பான செய்தி வெளியீடு:


Sunday, July 8, 2018

UGC-NET Dec 2018 tentative schedule Declared.

 UGC-NET in Dec 2018: (tentative schedule)
Online submission of application forms 01.09.2018 to 30.09.2018.

Dates of examination:
 02.12.2018 to 16.12.2018
(two shifts per day on
Saturdays and Sundays)
Declaration of results Last week of January 2019. The examinations for all candidates will be conducted in online
(computer based) mode only. (starting from next exam UGC-
NET exam)

Official press release of National Test Agency:




Saturday, July 7, 2018

சுந்தரனாா் பல்கலை.யில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சே.சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்றற தமிழக அரசின் பொது நுழைவுத் தோ்வு எழுதிய மற்றும் எழுதாத மாணவா்களும் தற்போதுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன் ரூ.650-க்கான வரைவோலையை (எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு ரூ.150) இணைத்து, துறைத் தலைவா், மேலாண்மையியல் துறை, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வரும் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி நடைபெறவுள்ள குழு விவாதம் மற்றும் நோ்காணலில் பங்கேற்க வேண்டும். 13-ஆம் தேதி தகுதி அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

தமிழில் வருகிறது எம்.எஸ். ஆஃபீஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய துறையில் புதிய, ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டு வருவதே இதற்கு காரணம் புதிய பாடத்திட்டம் முதல் புதிய யூனிபார்ம் வரை அவருடைய திட்டங்கள் அனைத்திற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆபீஸ் என்ற சாப்ட்வேரை தமிழில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மிக விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.ஆஃபிஸில் உள்ள எக்ஸெல், வேர்ட், பவர்பாயிண்டு உள்பட அனைத்துமே விரைவில் தமிழில் மாணவர்களுக்கு வரும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் 17ம் தேதிக்குள் முதற்கட்ட நீட் தேர்வு நடைபெறும். இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே 12 முதல் 26ம் தேதிக்குள் நடத்தப்படும். டெல்லியில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் NEET, JEE Main, UGC Main, G-MAT, G-PAT, G-Main உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்றும் 8 அமர்வுகள் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் இனி நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்றும் கூறினார். JEE main தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். 2 கட்டங்களாக நடைபெறுவதால் மொத்தமாக தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பயிற்சிகள் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் என்று தெரிவித்தார். 2 முறை தேர்வு எழுதினாலும் அதில் சிறந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஏதேனும் ஒரு தேர்வை மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுதலாம் எனவும் கூறியுள்ளார். தேர்வுகள் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும், பாடத்திட்டம் மற்றும் தேர்வு கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 3 முதல் 17ம் தேதிக்குள் முதற்கட்ட நீட் தேர்வு நடைபெறும், முதற்கட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே 12 முதல் 26ம் தேதிக்குள் நடத்தப்படும், விருப்பமுள்ள தேதியை மாணவர்கள் தேர்வு செய்து எழுதலாம் என்றும் மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வு நடத்துவதில் சிரமம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு!

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூலை 16, 17, 18ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கூடுதல் விவரங்களை அறிய www.tnmedicalselection.net , www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான முழு நேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் தலா ரூ.2,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது நிறுவன வலைதளத்திலோ (‌w‌w‌w.‌u‌l​a‌k​a‌t‌h‌t‌h​a‌m‌i‌z‌h.‌o‌r‌g)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஜூலை 31 -ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 6 -ஆம் தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து வகுப்புகள் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி தொடங்கும். இதுகுறித்து மேலும் தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி அஞ்சல், சென்னை- 600 113 என்ற முகவரியிலும், 044- 2254 2992, 044- 2254 0087 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

உதவித்தொகையுடன் கல்வெட்டு படிப்பு.

உதவித்தொகையுடன், கல்வெட்டு மற்றும் அகழாய்வில், முதுநிலை டிப்ளமா படிப்புகளை, தமிழக தொல்லியல் துறை துவக்கி உள்ளது
இது குறித்து, தமிழக அரசு தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் கூறியதாவது. தமிழ், சமஸ்கிருதம், தொன்மை வரலாறு, தொல்லியல் ஆகியவற்றில், முதுநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, ஓராண்டு கால, தொல்லியல் அகழாய்வு மற்றும் கல்வெட்டில், டிப்ளமா படிப்புகளை, தமிழக அரசின் தொல்லியல் துறை துவக்கி உள்ளது. இதற்கான விண்ணப்பங்களில், பெயர், முகவரி, கல்வித்தகுதி, இனம் ஆகியவற்றை குறிப்பிட்டு, 'ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 8' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், tnarch@tn.nic.in என்ற மின்னஞ்சலிலும், இம்மாதம், 16ம் தேதிக்குள் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பி.இ.: 117 மாற்றுத்திறனாளிகள் சேர்க்கை

சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு தொடக்க நாளில், 117 மாற்றுத்திறனாளிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அவசியம்.தினரின் வாரிசுகளுக்கு சனிக்கிழமையன்றும், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையன்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
166 பேருக்கு அழைப்பு
முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இந்தப் பிரிவினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் ஒதுக்கப்படும் என்ற போதும், இந்த முறை 200-க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுள்ள 166 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அதில் பார்வை குறைபாடுடைய 15 பேர் உள்பட 117 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்
முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள்:
இதைத் தொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடத்தப்படுகிறது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்
விளையாட்டுப் பிரிவினர்:
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது. 500 இடங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டியது அவசியம்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு:
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் இறுதி செய்யவில்லை.

இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்,பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தகவல்.

இணையத்தை பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார்.
தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 1, 6, 9, 11 -ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களில், கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் யாவும் ஒருங்குறி (யூனிகோட்) முறையில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் இணைய வழங்கல் என்று கூறும்படி ஆசிரியர்களும், மாணவர்களும் இணையதளம் சென்று பயன்படுத்தக்கூடிய பல்வேறு செய்திகளை இந்தப் பாடங்களில் இணைவந்துஅவு.. மாணவர்கள் 6 -ஆம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல் பாடமானது அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்பிக்கப்படுகிறது. அதேபோல், மாணவர்கள் தங்களின் பாடங்களை வீடியோக்கள், புகைப்படங்கள், செயல் விளக்கங்கள் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விரைவுக் குறியீடுகள் (க்யூ.ஆர்.கோடு) ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. விரைவுக் குறியீடுகளை பாடங்களில் வழங்கும் முயற்சியில் மகாராஷ்டிரம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் முயற்சி செய்தாலும் தமிழகம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தது*
அத்துடன் மிக அதிக அளவாக 144 பாடங்களில், 2,895 குறியீடுகளை இடம்பெறச் செய்துள்ளோம்
மேலும், இவற்றைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் தற்போது முன்னோடியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொத்த விரைவுக் குறியீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. தமிழகத்தில் தினசரி சுமார் 2 லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும் விரைவுக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக் கல்வித் துறை பெரும் பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் 3 ஆயிரம் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்

கல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது. பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும். புதிய ஊதிய விகிதத்தின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் முதல் நிலை (நிலை-10) உதவிப் பேராசிரியருக்கு ரூ.57,700, இரண்டாம் நிலை (நிலை-11) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 68,900 என்ற அளவிலும், மூன்றாம் நிலை (நிலை-12) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 79,800 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இணைப் பேராசிரியருக்கு ரூ. 1,13,400 என்ற அளவில் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
பேராசிரியருக்கான ஊதியத்தைப் பொருத்தவரை முதல் நிலை (நிலை-14) பேராசிரியருக்கு ரூ. 1,44,200 என்ற அளவிலும், இரண்டாம் நிலை (நிலை-15) பேராசிரியருக்கு ரூ. 1,82,200 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வருக்கு:
புதிய ஊதிய விகிதத்தின்படி, இளநிலை பட்டப் படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரி முதல்வருக்கு ரூ.1,31,400 மாத ஊதியத்துடன் சிறப்பு மாதப் படி ரூ. 2000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கு மாத ஊதியம் ரூ. 1,44,200 என்ற அளவிலும், சிறப்பு மாதப் படி ரூ. 3000 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தருக்கு ரூ. 2.1 லட்சம்.
பல்கலைக்கழக துணைவேந்தருக்கான மாத ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மாத சிறப்புப் படியாக ரூ. 5,000 வழங்கப்படும்.
ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை:
பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ளதுபோல கல்லூரி ஆசிரியர்களுக்கு 58 வயதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 60 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதுக்குப் பின்னர் மறுபணியமர்வு வழங்கப்படமாட்டாது.

Tuesday, July 3, 2018

அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் கீழ்கண்ட நேரடி படிப்புகளுக்கான (மே 2018) தேர்வு முடிவுகள் www.annamalaiuniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
படிப்புகளின் விவரம்: கலை, அறிவியல், கல்வியியல் அனைத்துப் படிப்புகள். நுண்கலை, சிபிசிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள், இந்திய மொழிப் புலம் (5 ஆண்டு படிப்புகள்), வேளாண்மைத் துறை - இளநிலை வேளாண்மை ((B.Sc. Agri),), பொறியியல் புலம், இளநிலை மருந்தாக்கியல் (B.Pharm),முதுநிலை மருந்தாக்கியல் (M.Pharm), பட்டயம் மருந்தாக்கியல் (D.Pharm), மருந்தாக்கியல் முனைவர் (Pharm.D)

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -இல் தொடக்கம்

பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது
 தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களில் தகுதிபெற்ற 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முறை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன் -லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில், கட்டணம் ஏதுமின்றி கலந்தாய்வில் பங்கேற்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 10 -ஆம் தேதி நிறைவடைந்த பின்னர், பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
சிறப்புப் பிரிவு கலந்தாய்வு

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை முன்கூட்டியே ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் அல்லாமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவர்களுக்கென 6,000-த்துக்கும் அதிமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் 200 -க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் நாளான ஜூலை 7 -ஆம் தேதி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 8 -ஆம் தேதியன்று, விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டும் என்றார் அவர்.

விடுதியில் தங்கி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி: அமைச்சர் வளர்மதி அறிவிப்பு.

விடுதிகளில் தங்கிப் படிக்கும்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.வளர்மதி சட்டப்பேரவையில் அறிவித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள். ஒரு விடுதியில் 100 மாணவ-மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் 5 கல்லூரி விடுதிகள் புதிதாகத் தொடங்கப்படும். ஆறு பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். விடுதிகளில் தங்கி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்படும். ஏழ்மை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட வயதான கிறிஸ்தவ மகளிருக்காக உதவிடும் வகையில் இந்தச் சங்கம் ஏற்படுத்தப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவியர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் புத்தகங்கள் அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள விடுதிகளில் 21 விடுதிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் படிப்போருக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.650-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி அறிவித்தார்.

Sunday, July 1, 2018

உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விக் கடன் உயர்வு

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ. 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வட்டியை மானியமாக வழங்கும் திட்டம் 2009-இன்படி உயர்கல்வியில் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 2018-19-ஆம் ஆண்டு முதல், தகுதி அடிப்படையில் ரூ. 7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்க மத்திய உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் அதிகபட்சமாக ரூ. 7.50 லட்சம் வரை கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறும் கடனுக்கு ஓராண்டுக்கான வட்டி மானியமாக வழங்கப்படும்.
 வரைமுறைகள்:
பயனாளியின் குடும்ப வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர், தேசிய தரச்சான்று நிர்ணயக் குழு, இந்திய மருத்துவக் கழகம், தேசிய செவிலியர் கழகம், இந்திய பார் கவுன்சில் அனுமதி பெற்ற நிறுவனங்கள், மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும். இத்திட்டம் இனிவரும் காலங்களில் புதிதாக கல்விக் கடன் பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும். திட்டத்தின் ஒருங்கிணைப்பு வங்கியாக கனரா வங்கி செயல்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார்.  மேலும் அவர்,சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 உள்ளன.
இந்த கல்லூரிகளில் தற்போது படித்து முடித்த மாணவர்களின் தற்காலிக சான்றிதழ்கள் முதல் முறையாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in ) வெளியிடப்படுகிறது. அந்த சான்றிதழ்களை ஜூலை 1-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது 3 மாதம் செல்லும். அதற்குள் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும். இனி இளநிலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் தற்காலிக சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த சான்றிதழ்களை கொண்டு மாணவர்கள் எந்த கல்லூரியிலும் சேரலாம்.  அதற்கான உத்தரவு அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும். அந்த சான்றிதழில் ரகசிய கோடு உள்ளது.
இலவசக் கல்வி:
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இளநிலை படிப்பில் இலவச கல்வி அளிக்க 3 இடங்கள் வழங்க உள்ளோம்.  அதற்கு பெற்றோரில் ஒருவரை இழந்தவராகவும், ஏழை மாணவராகவும், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த இடங்களை 10-ஆக அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது, முதல்நாளில் சிறப்பு இடஒதுக்கீட்டு பிரிவினர் பங்கேற்றுள்ளனர். இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் 5 புதிய பாடங்கள் தொடக்கம்.

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் 5 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தே.லெட்சுமி  தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி, எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஹெச்டி. கணிதம், எம்பிஃல் கணிதம், எம்.எஸ்சி. அறிவியல், எம்.எஸ்சி. விலங்கியல், இளங்கலை வணிக நிர்வாகவியல் ஆகிய 5 புதிய பாடப் பிரிவுகள் 2018-19 கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளன. இளங்கலை பாடத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை 9ஆம் தேதிக்குள்ளும், அனைத்து முதுகலை பாடங்களுக்கான விண்ணப்பங்களை ஜூலை 18ஆம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இளங்கலை வணிக நிர்வாகவியல் பாடத்திற்கு, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 16ஆம் தேதியும், பிற பிரிவினருக்கான முதலாம் கலந்தாய்வு ஜூலை 17ஆம் தேதியும், 2ஆம் கலந்தாய்வு ஜூலை 19ஆம் தேதியும் நடைபெறும். அதேபோல், முதுகலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 23ஆம் தேதியும், பிற பிரிவினருக்கான முதலாம் கலந்தாய்வு ஜூலை 24ஆம் தேதியும், 2ஆம் கலந்தாய்வு ஜூலை 26ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...