ஏழை எளிய மக்களும் தங்களுடைய பிள்ளைகளை எந்த கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கலாம். இதற்கான வழியை அவர்களுக்கு அமைத்து தருகிறது 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்'. இதற்கான விண்ணப்பம் ஏப்ரல் 20-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய பிள்ளைகளை தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலேயே சேர்த்து படிக்க வைக்க விரும்புகின்றனர், இருந்தாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு மெட்ரிக் கல்வி இப்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது. இத்தன்மையை மாற்றும் விதமாக அமைந்துள்ளது இச்சட்டம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 25 சதவிகித இடங்களில் சேரும் அனைத்துக் குழந்தைகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும். பெற்றோர்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும், சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஏற்கெனவே தங்களுடைய குழந்தையை எல்.கே.ஜி வகுப்பு அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் தேதி : ஏப்ரல் 20 முதல் மே 18 வரை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (www.dge.tn.gov.in)
தேர்வு செய்யும் முறை:
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கிட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெற்றிருந்தால் இருந்தால் 23.05.2018 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட விண்ணப்பங்கள் குறைவாக இருந்தால் தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதார்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்புப் பட்டியலை 24.05.2018 பள்ளித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் 29.05.2018-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment