Saturday, January 5, 2019

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் மட்டுமே வேலை வாய்ப்புக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யபட்டு வந்தனர். கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய் பேசமுடியாத மனுதாரர்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். சிறப்பு பிரிவு ராமநாதபுரத்தில் துவக்கப்பட்டிருப்பதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்துகொள்ளலாம். அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பரிந்துரை செய்தல், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவின் மூலம் செயல்படுத்தபட உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா: மாணவர்களுக்கு CEO வாழ்த்து.

தர்மபுரி மாவட்டம், பேகாரஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் யோகேஷ், பிளஸ் 1 மாணவன் ராஜா ஆகியோர், அறிவியல் கண்காட்சியில், சிறப்பிடம் பிடித்தனர். 10ம் வகுப்பு மாணவன் சக்திவேல், பெங்களூரில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சிறந்த படைப்புகளை சமர்ப்பித்த, 50 மாணவ, மாணவியரை தேர்வு செய்து, பின்லாந்து நாட்டுக்கு, 13 நாட்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல, அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து, பின்லாந்து கல்வி சுற்றுலா செல்லும், யோகேஷ், ராஜா, பெங்களூர் அறிவியல் கண்காட்சி பங்கேற்கும் சக்திவேலுக்கு, தர்மபுரி சி.இ.ஓ., ராமசாமி, வாழ்த்து தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு பதிவை சரிபார்க்க அழைப்பு.

மருந்தாளுநர் காலிப்பணியிடத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், மருந்தாளுனர், 335 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த பட்டியலின் பதிவு மூப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, கல்வித்தகுதி தமிழ்நாடு பார்மஸி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில், டிப்ளமோ இன் பார்மஸி படித்திருக்க வேண்டும். 2018, ஜூன், 1 அன்று எஸ்.சி.ஏ., - எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பிரிவினருக்கு, 57ம், பொதுப்பிரிவினருக்கு, 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்த பதிவுதாரர்கள் விபரம், அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் வரும், 7க்குள் தங்கள் பதிவினை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Friday, January 4, 2019

ஜனவரி 23, 24ம் தேதிகளில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விரும்பும் மாணவர்கள் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தை தேர்வு செய்யும்போது கண்டிப்பாக தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக எழுத வேண்டும். முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 2019 மார்ச் 1ம் தேதி பதினான்கரை வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், 9ம் வகுப்பு வரை படித்து இடையில் நின்றவர்கள், பிற துறையால் நடத்தப்படும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாடத் தேர்வு இருப்பதால், செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்து செய்முறைத் தேர்வு எழுதிய பிறகே அறிவியல் பாடத் தேர்வை எழுத முடியும். செய்முறை பயிற்சி வகுப்பில் சேர கடந்த 8.6.18 முதல் 30.6.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். ஏற்கெனவே அறிவியல் பாடத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் செய்முறை அல்லது எழுத்து தேர்வு இதில் எந்த பகுதியில் தோல்வி அடைந்தார்களோ அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் குறித்த விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்புக்கு தனித் தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் ₹125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50 சேர்த்து செலுத்த வேண்டும். தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் ஆன்ைலனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

குரூப்-1 பதவிக்கு 21ம் தேதி நேர்காணல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி தொடங்கும்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து டி.என்.பிஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு. குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் உள்ள  தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான தகவல்  விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத்தேர்வுக்கான குறிப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.  குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும்,  முழுத் தகுதி பெற உறுதி  அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 2, 2019

தொலைநிலைப் படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்க முடியும்? யுஜிசி அறிவிப்பு.

2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன. தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டுதலை யுஜிசி நடைமுறைப்படுத்தியது. இதனால் குறிப்பிட்ட "நாக்' தரப் புள்ளிகளைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி, 2018-2019-ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது. இதுபோன்று, 2019-2020 கல்வியாண்டில் நாடு முழுவதும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற அறிவிப்பை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டில் தகுதி பெற்றிருந்த அந்த 5 தமிழக பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டிலும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும், அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 73 படிப்புகளையும், தமிழ் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட 16 படிப்புகளையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல்தொடர்பு, பிபிஏ, எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5 படிப்புகளையும் வழங்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-இல் நடைபெறும் போட்டித் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்த பட்டியலை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான (2019) உத்தேச தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் நலன் கருதி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள வசதியாக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரதான தேர்வுகளாகக் கருதப்படும் குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கை ஜனவரியிலும், குரூப்- 2 தேர்வுக்கான அறிவிக்கை மே மாதத்திலும், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்- 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு ஜூனிலும் வெளியிடப்பட உள்ளன. குறைந்த அளவிலான தேர்வர்கள் பங்கேற்கக் கூடிய தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்படக் கூடிய மாதங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கான அட்டவணைப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 17 தேர்வுகளும் நடத்தப்பட்டு 6 ஆயிரத்து 383 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 8 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 22 அறிவிக்கைகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018-ஆம் ஆண்டில் 23 பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட உத்தேசிக்கப்பட்டு அதில் 15 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அத்துடன் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படாத 16 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மொத்தம் 15 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 16 பதவிகளுக்கான தேர்வுகள் வரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவுள்ளன. இவற்றின் மூலம் 4,365 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. உறுப்பு நலன் குன்றிய மாற்ற...